அமைச்சர் பொன்முடி பங்கேற்ற கிராமசபை கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பேச்சுக்கு எதிர்ப்பு- சலசலப்பு
அமைச்சர் பொன்முடி பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர்,
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிலர் 100 நாள் வேலை சரியாக கிடைப்பதில்லை எனவும், அரசு வழங்கும் இலவச வீடுகள் எங்களுக்கு கிடைப்பதில்லை எனவும், குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், ஒவ்வொருவருக்கும் 100 நாள் மட்டுமே வேலை வழங்கப்படும், கூடுதலான நாட்கள் வேலை கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு. இந்த திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை கொடுக்க வேண்டும் என்ற அரசு விதி உள்ளதால் அதன்படி மட்டுமே செயல்பட முடியும். அரசு வழங்கும் இலவச வீடுகளை அந்தந்த ஊராட்சியில் ஏழைகள் பயன்பெறும் வகையில் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சலசலப்பு
அப்போது அங்கிருந்த ஒன்றியக்குழு உறுப்பினர் ரேவதி பெருமாள், ஊராட்சி மன்றத்தில் எனது கோரிக்கைகள் ஏற்கப்படுவதில்லை. நானும் மக்களிடம் ஓட்டு வாங்கி தான் வெற்றி பெற்றுள்ளேன். நான் சொல்லும் எதுவும் நடப்பதில்லை என்றார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அமைச்சர் பொன்முடி, இது தலைவருக்கும் ஒன்றியக்குழு உறுப்பினருக்குமான பிரச்சினை. இதனை நீங்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது குறை இருந்தால் தெரிவியுங்கள் என்றார்.
வளர்ச்சி பணி
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடத்தில் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதற்கு பதில் அளித்து பேசினார். முன்னதாக கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சி பணிகள் மற்றும் தேவைப்படும் பணிகள் குறித்தும் வரவு- செலவினங்கள் குறித்தும் பொது மக்களிடையே கணக்கு படித்துக் காண்பிக்கப்பட்டது.