ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்


ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் கிராமசபை கூட்டத்தில்  வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கிராமசபை கூட்டம்

தமிழகத்தில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கிராமசபை கூட்டங்களில் வேளாண் உழவர் நலத்துறையில் பல்வேறு திட்டங்களில் 2022-23-ம் ஆண்டில் பயன்பெற்ற திட்டப் பயனாளிகளின் பெயர் விவரங்களை ஊராட்சி வாரியாக தயாரித்து, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர பயிரிடு பரப்பான 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்துவது, 10 லட்சம் எக்டேர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இருமடங்காக, அதாவது 20 லட்சம் எக்டேராக உயர்த்துவது, உணவு தானியங்கள், தேங்காய், பருத்தி, சூரியகாந்தி மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் தேசிய அளவில் முதல் 3 இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிப்பது ஆகிய தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திட்டங்கள்

இந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி, அதனை அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மற்றும் பதாகைகள் வைக்கப்பட உள்ளன. கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை, உழவர் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளன. உழவன் செயலி பற்றிய பயன்பாட்டை எடுத்துக்கூறி தேவைப்படும் விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்தும் கொடுக்கப்பட உள்ளது. பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்களை இணைக்கும் அவசியத்தை எடுத்துக்கூறி அத்திட்டப் பயன்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட உள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் கிராம பஞ்சாயத்துக்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பயன்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story