புதுமைப்பெண் திட்டத்தில் 383 மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித்தொகை


புதுமைப்பெண் திட்டத்தில்  383 மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித்தொகை
x

தூத்துக்குடி மாவட்டத்தில் 383 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் உயர் கல்வி உதவித் தொகையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை காலை வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 383 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் உயர் கல்வி உதவித் தொகையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலை வழங்கினார்.

புதுமை பெண் திட்டம்

தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்ட தொடக்க விழா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 383 மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கி பேசினார்.

தந்தையாக..

அப்போது, மிழக முதல்-அமைச்சர் அத்தனை மாணவிகளுக்கும் தந்தையாக விளங்கி வருகிறார். பெண்கள் உயர வேண்டும் என்ற வகையில் இந்த திட்டத்தை தந்து உள்ளார். மாணவிகள் இடைநிற்காமல் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவிகள், தாய், தந்தை, கல்லூரி பேராசிரியர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். இந்த திட்டத்தால் மாணவிகள் உயர்ந்து உள்ளனர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story