தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 1¾ லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில்  1¾  லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
x

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 1¾ லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 1¾ லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டகுழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நீர் மற்றும் சுகாதாரம் குறித்த மாவட்ட அளவிலான குழு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான திட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் விஸ்வலஜங்கம், சண்முகநாதன், உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீர் ஆதாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொற்கை, முக்காணி, பழையகாயல், சிறுதொண்டநல்லூர், சூளைவாய்கால் மற்றும் திருப்பணிசெட்டிகுளம் ஆகிய 6 பஞ்சாயத்துக்கு உட்பட்ட 20 குக்கிராமங்களுக்கு ரூ.17 கோடியே 46 லட்சத்து 35 ஆயிரம் செலவில் குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த மழையின் போது, ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குழாய்கள் சேதம் அடைந்தன. இதனால் ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, சாலைபுதூர், ஆசூர், தளவாய்புரம், வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, சத்திரப்பட்டி மற்றும் இடைச்செவல் ஆகிய

8 குக்கிராமங்களில் நிரந்தரமாக குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய புதிய திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்துகளில் 1761 குக்கிராமங்கள் உள்ளன. இதில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 951 வீடுகள் உள்ளன. இதில் 36 ஆயிரத்து 905 வீடுகளில் குடிநீர் இணைப்பு உள்ளது. இதனால் மீதம் உள்ள 3 லட்சத்து 37 ஆயிரத்து 46 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1 லட்சத்து 49 ஆயிரத்து 908 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1 லட்சத்து 35 ஆயிரத்து 468 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 14 ஆயிரத்து 440 வீடுகளக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1 லட்சத்து 87 ஆயிரத்து 138 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் 2020-21-ம் ஆண்டு வரை வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கிய குக்கிராமங்கள் போக மீதம் உள்ள 561 கிராமங்களுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story