கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்கரும்பு அறுவடை பணி தீவிரம்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்கரும்பு அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கிடையே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், கூழையனூர், கோட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் அவை நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் தற்போது கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் விளையும் கரும்புகள் அதிக இனிப்பு சுவை கொண்டதாக இருக்கிறது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. கரும்புகள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால், ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மற்றும் நல்ல மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர் என்றார்.


Next Story