கீழ்பவானி வாய்க்காலில்நன்செய் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் திறக்க வேண்டும்கலெக்டரிடம் விவசாயிகள் மனு
கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளிக்கப்பட்டது
கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
100 நாள் வேலை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கொடுத்திருந்த மனுவில், 'ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பெறுகின்றனர். கடந்த 8 வாரங்களுக்கு மேலாக கூலி வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் பேசி, அனைத்து தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கவும், உடனுக்குடன் கூலி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
நன்செய் பாசனம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஈ.பி.பி.நகரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கொடுத்திருந்த மனுவில், 'சாலை விரிவாக்கத்துக்காக எனது நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கவேண்டும்' என்று கூறி இருந்தார்.
கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'கீழ்பவானி திட்ட கால்வாயில் இரட்டை படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாயில் ஒற்றைப்படை மதகுகளுக்கும் நன்செய் பாசனத்துக்கும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் தற்போது நீர் இருப்பும், அணைக்கு வரும் நீரின் வரத்தும் குறைவாக உள்ளது. பருவமழையை எதிர்பார்த்த நிலையில், பருவமழை கை கொடுக்கவில்லை. கடைமடை பகுதியில் தற்போதுதான் நாற்று விட்டுள்ளனர். எனவே நன்செய் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் திறக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேற்கண்ட கோரிக்கை மனுவை விவசாயிகள், அமைச்சர் சு.முத்துசாமியிடமும் நேற்று வழங்கினர்.
465 மனுக்கள்
வெள்ளோடு, சி.எஸ்.ஐ. காலனி பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'வெள்ளோடு, சி.எஸ்.ஐ., காலனியில் நாங்கள் பரம்பரையாக வசிக்கிறோம். எங்கள் காலனிக்குட்பட்ட பகுதியில் வேறு தரப்பினர் ஆக்கிரமித்து, விவசாயம் மற்றும் சாலை அமைத்து, நிலங்களை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய உள்ளனர். எனவே எங்கள் காலனியை வரையறை செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். முன்னதாக அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்போவதாக கொண்டு வந்தனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் சமாதானம் அடைந்து ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்காமல் சென்றனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில், 'மாத்தூர் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை விவசாயம் செய்வதற்காக பனை ஏறும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக கேட்டு வருகிறார்கள். அரசு கடந்த 1971-ம் ஆண்டு 250 ஏக்கர் நிலம் வழங்கியும், இவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனவே அரசு வழங்கி உள்ள அந்த 250 ஏக்கர் நிலம் அங்குள்ள 150 குடும்பத்தினருக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
இதேபோல் மொத்தம் 465 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர், 2 பேருக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 200 மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், வாய்க்காலில் மூழ்கி இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையினையும் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.