புதுமண தம்பதி கொலையில் பெண்ணின் தந்தை-தாய் கைது
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கொலையில் பெண்ணின் தந்தையை போலீசார் ைகது செய்தனர். உடந்தையாக இருந்த தாயாரும் சிக்கினார்.
காதல் திருமண தம்பதி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மாணிக்கராஜ் (வயது 28), லாரி ஓட்டுனர். இவரும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான முத்துகுட்டி மகள் ரேஷ்மாவும் (20) காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, கடந்த மாதம் 29-ந் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீ்ஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. போலீசார் அவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து புதுமண தம்பதியினர் திருமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து வந்தனர்.
வெட்டிக்கொலை
கடந்த வாரம் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு வந்த அவர்கள் மாணிக்கராஜின் வீட்டில் தங்கினர். நேற்று முன்தினம் காலை மாணிக்கராஜின் தாயார் பேச்சியம்மாள் 100 நாள் வேலைக்காக சென்று விட்டார். இதனால் மாணிக்கராஜ், ரேஷ்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.
அப்போது அங்கு சென்ற முத்துகுட்டி தகராறு செய்து, தனது மகள், மருமகன் இருவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். பின்னர் முத்துகுட்டி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பெண்ணின் தந்தை கைது
இதையடுத்து அவரை பிடிக்க விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, சப்-இன்ஸ்பெக்டர் முத்து விஜயன், தனிப்பிரிவு காவலர் கணேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முத்துகுட்டியை தேடி வந்தனர்.
நேற்று அதிகாலையில் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றபோது, அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
எனது மகள் ரேஷ்மாவை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைத்து கல்லூரியில் படிக்க வைத்தேன். மேலும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைத்தோம். அவர் காதலிப்பதை தெரிந்து கொண்ட நான் அதை கண்டித்தேன். இதையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி தேர்வு எழுத செல்வதாக என்னிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
எதிர்ப்பை மீறியதால்...
இதுகுறித்து எட்டயபுரம் போலீசில் புகார் செய்தேன். பின்னர் அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாக எனக்கு போன் வந்தது. எனது எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் அவர்கள் வீட்டிற்கு சென்று, அரிவாளால் முதலில் மாணிக்கராஜை வெட்டினேன். இதை தடுக்க வந்த எனது மகள் ரேஷ்மாவையும் வெட்டினேன். இதில் அவர்கள் இறந்து விட்டனர். பின்னர் அரிவாளை எனது வீட்டிலேயே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டேன். போலீசார் கோவில்பட்டியில் எனது உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில் என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தாயாரும் கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த இரட்டைக்கொலைக்கு முத்துகுட்டியின் மனைவி மகாலட்சுமியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கொலை செய்ய தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, அவரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலை நடந்த 10 மணி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு கொலையாளியை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.