பழைய காயல் பகுதியிலுள்ள உப்பளங்களில் மின் மோட்டார்கள், ஒயர்கள் திருட்டை தடுக்க கோரிக்கை
பழைய காயல் பகுதியிலுள்ள உப்பளங்களில் மின் மோட்டார்கள், ஒயர்கள் திருட்டை தடுக்க வேண்டும் என்று உப்பள உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறுமுகநேரி:
பழையகாயல் பகுதியிலுள்ள உப்பளங்களில் மின்மோட்டார்கள் மற்றும் மின் ஒயர்கள் திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
பழைய காயல் உப்பு உற்பத்தியாளர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ராமச்சந்திரன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியசீலன், பொருளாளர் வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருட்டு
கூட்டத்தில், பழைய காயல்பகுதியில் உள்ள உப்பளங்களில் அடிக்கடி இரவு நேரங்களில் மின் மோட்டார்கள் மற்றும் மின்ஒயர்கள் திருடப்பட்டு வருகின்றன. இதனால் உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்களுக்கு பணம் விரயமும் ஏற்படுகிறது. மேலும் பல பகுதிகளில் தகாத செயல்களும் நடைபெற்று வருகின்றன. எனவே உப்பளப்பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களையும், தகாத செயல்களையும் தடுக்க போலீசார் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
கண்காணிப்பு கேமரா
இக்கூட்டத்தில் ஆத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், உப்பளங்களில் நடைபெறும் திருட்டுக்களை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உப்பு உற்பத்தியாளர்கள் உப்பளங்களில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். முக்கியமான இடங்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். சங்கத்தின் சார்பில் இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
கூட்ட முடிவில், உப்பு உற்பத்தியாளர்கள் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், இரவுநேர காவலர்களை நியமிக்கவும் முடிவு செய்வதாக தெரிவித்தனர்.