'ஏழைகளின் பட்டு' நகரமான இளம்பிள்ளையில் தீபாவளி ஜவுளி விற்பனை களை கட்டுமா? உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள் எதிர்பார்ப்பு
ஏழைகளின் பட்டு நகரமான இளம்பிள்ளையில் தீபாவளி ஜவுளி விற்பனை இதுவரை களை கட்டாத நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களும், கடைக்காரர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இளம்பிள்ளை,
ஏழைகளின் பட்டு நகரம்
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை என்றாலும், திருமணம் போன்ற இல்ல விழாக்கள் என்றாலும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது புத்தாடைகள். அதுவும் புடவைகள் மீது பெண்களுக்கு தனி பிரியம் உண்டு.
இன்னும் 12 நாட்களே தீபாவளி பண்டிகைக்கு உள்ள நிலையில் கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை எங்கும் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் ஜவுளிக்கடைகளில் அலைமோத தொடங்கி உள்ளது. கால மாற்றங்களால் இன்றைக்கு நகர்ப்புற மக்களிடம் ஆன்லைனில் ஜவுளிகள் வாங்கும் கூட்டமும் கணிசமாக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு ஜவுளி விற்பனை மும்முரமாகி உள்ள நிலையில், ஏழைகளின் பட்டு நகரம் என்று கூறும் அளவுக்கு பெயர் பெற்ற சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் தற்போது தீபாவளி ஜவுளி விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது. குறிப்பாக தீபாவளி விற்பனை கடை வியாபாரங்கள் சுமாராகவும், அதேநேரத்தில் ஆன்லைன் விற்பனை வியாபாரங்கள் 60 சதவீதமும் நடைபெற்று வருகிறது.
4 லட்சம் விசைத்தறிகள்
இளம்பிள்ளை, இடங்கணசாலை, வேம்படிதாளம், சின்னப்பம்பட்டி, தாரமங்கலம், சித்தர்கோவில், கே.ஆர்.தோப்பூர், ஜலகண்டாபுரம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் பிரதானமாகவும், குடிசை தொழிலாகவும் விசைத்தறி தொழில் பெருமளவில் நடைபெற்று வருகிறது. வீட்டுக்கு ஒரு தறி ஓடும் சத்தத்தை இளம்பிள்ளை நகர வீதிகளில் செல்லும் போது நாம் கேட்கமுடியும். இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இங்கு உற்பத்தியாகும், அபூர்வாப்பட்டு, சாமுத்திரிகா பட்டு, எம்போஸ் பட்டு, ஆல் எம்போஸ் பட்டு, பிக் அன்ட் பிக் எம்போஸ் மல்டி, எம்போஸ், மோனா காட்டன், கரிஷ்மா காட்டன், பாலி காட்டன், கல்யாணி காட்டன், சாப்ட் சில்க் என நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசைன்களும், பளபளக்கும் ஜரிகை வேலைப்பாடுகளுடன் பல்வேறு வண்ணங்களில் மனதை மயக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரம், கா்நாடகம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களும் அனுப்பப்படுகின்றன. இதுதவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் இளம்பிள்ளை சேலைகள் ஏற்றுமதி ஆகின்றன. இவ்வாறு ஏற்றுமதி தரமிக்க ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிலை நம்பி, ஆயிரக்கணக்கான ஜவுளி வியாபாரிகளும், லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்களும், இதை சார்ந்த வார்ப்பு, ஜரிகை, வாசிங் என பல லட்சம் தொழிலாளர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி இளம்பிள்ளை நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சிறிய அளவில் இருந்து பெரிய அளவிலான ஜவுளி கடைகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த கடைகளுக்கு கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு, வெளியூர் ஆர்டர்கள் சிறப்பாக இருந்த நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு இந்த தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி ஆர்டர்கள் குறைவாகவே உள்ளன. போதுமான அளவில் ஆர்டர்கள் கிடைக்கவில்லை.
குறிப்பாக இளம்பிள்ளையில் உள்ள ஜவுளி கடைகளுக்கு தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர் என தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் குடு்ம்பம், குடும்பமாக வந்து சேலைகளை வாங்கி செல்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளி ஜவுளி விற்பனை மந்தமான நிலையிலேயே இருந்து வருவதாகவும், தீபாவளிக்கு குறுகிய நாட்களே உள்ளதால் விற்பனை களை கட்ட வேண்டும் என்ற ஜவுளி உற்பத்தியாளர்களும், கடைக்காரர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.