2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.279 கோடி நிகர லாபம்


2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.279 கோடி நிகர லாபம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.279 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளதாக நிரவாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.279¾ கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் குழு கூட்டம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குனர் குழு கூட்டம் சென்னையில் நடந்தது. 2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் 2022-23-ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்த ஒன்பது மாத கால நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2022-23-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 5.69 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.78,242 கோடியை எட்டி உள்ளது. வைப்புத்தொகை ரூ.43 ஆயிரத்து 440 கோடி என்ற நிலையை அடைந்து உள்ளது. கடன்களின் மொத்த தொகை ரூ.34 ஆயிரத்து 802 கோடி என்ற நிலையில் உள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை ரூ.12 ஆயிரத்து 851 கோடியாக உள்ளது.

கடன்கள்

வங்கியானது விவசாயம், சிறு குறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2022-23-ம் மூன்றாம் காலாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.23 ஆயிரத்து 235 கோடியில் இருந்து ரூ.25 ஆயிரத்து 636 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 10.33 சதவீதம் ஆகும். முன்னுரிமை துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40 சதவீதம் என்ற இலக்கை விட அதிகமாக 79.67 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது.

விவசாய துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.10 ஆயிரத்து 620 கோடியாக உள்ளது. விவசாய துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு மொத்த கடன்களில் 18 சதவீதம் ஆகும். இந்த துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 30.52 சதவீதம் கடன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு, குறு தொழில் கடன் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.11 ஆயிரத்து 986 கோடியில் இருந்து ரூ.12 ஆயிரத்து 870 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 7.38 சதவீதமாக உள்ளது.

நிகர லாபம்

வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.404.81 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இதே மூன்றாம் காலாண்டில் ரூ.401.12 கோடியாக இருந்தது). நிகர லாபம் ரூ.279.70 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இதே மூன்றாம் காலாண்டில் ரூ.202.88 கோடியாக இருந்தது.) இது 37.86 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.534.27 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டை விட 18 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. வங்கியின் மொத்த வராக்கடன்களின் தொகையில் 1.70 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 0.75 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இந்த காலாண்டில் புதிதாக 2 கிளைகளை திறந்து உள்ளது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 25 புதிய கிளைகளை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். காப்பீடு திட்டங்களை வணிகப்படுத்த, மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், சோழா எம்.எஸ். பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் கோடக் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு ஒப்பந்தங்களை நடப்பு நிதியாண்டில் எஞ்சியிருக்கும் காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story