தூத்துக்குடிவிபத்தில்7 வயது சிறுவன் பலி:மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பரிதாபம்


தூத்துக்குடிவிபத்தில்7 வயது சிறுவன் பலி:மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பரிதாபம்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 7 வயது சிறுவன் பலியானான்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

2-ம் வகுப்பு மாணவன்

தூத்துக்குடி சாமுவேல்புரம் ஆர்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 41). இவருடைய மகன் டெரிக்சன் (7). இவன் காயல்பட்டினத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவன் விடுமுறை நாட்களில் தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி டெரிக்சன் விடுமுறைக்காக தூத்துக்குடிக்கு வந்தான்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

நேற்று முன்தினம் மாலையில் ஆரோக்கியசாமி தன்னுடைய மகன் டெரிக்சன் மற்றும் நண்பரான ஜோசப் காலனியை சேர்ந்த அன்பு போஸ்கோ (50) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ரோச் பூங்காவுக்கு சென்றார். பின்னர் அவர்கள் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அன்பு போஸ்கோ ஓட்டினார்.

அவர்கள் இனிகோநகர் அருகில் சென்றபோது, தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தைச் சேர்ந்த தாமஸ் மகன் ரித்திஷ் (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அன்பு போஸ்கோ ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

பரிதாப சாவு

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் டெரிக்சன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயமடைந்த சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சிறுவன் டெரிக்சன் பரிதாபமாக இறந்தான்.

படுகாயமடைந்த ரித்திசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரோக்கியசாமி, அன்பு போஸ்கோ ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story