உடன்குடி பஜாரில் மாடு முட்டியதில் பந்தல் தொழிலாளி பரிதாப சாவு
உடன்குடி பஜாரில் மாடு முட்டியதில் பந்தல் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். இதை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
உடன்குடி:
உடன்குடி பஜாரில் மாடு முட்டியதில் பந்தல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தல் தொழிலாளி
உடன்குடி ஸ்டாலின் நகரில் வசிந்து வந்தவர் நாராயணன் மகன் சுடலைமணி (வயது 55). பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கு சூரியகாலா என்ற மனைவியும் 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் உடன்குடி வடக்கு பஜார் சந்தையடி சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சந்தையடி சாலையில் கூட்டம் கூட்டமாக முற்றுகையிட்டவாறு மாடுகள் நின்று கொண்டிருந்தன.
மாடு முட்டியதில் சாவு
திடீரென அந்த மாடுகள் ஒன்றை ஒன்றை முட்டிக் கொண்டு சாலையில் சண்டை போட்டுள்ளன. இதைப் பார்த்து பதறிப்போன அவர் மோட்டார் சைக்கிளை சாலைஓரத்தில் நிறுத்த முயற்சித்துள்ளார். அதற்குள் ஒரு இவரது மோட்டார் ைசக்கிள் மீதுமோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்்த அவரை மற்றொரு மாடு சுடலைமணி நெஞ்சில் தலையால் முட்டியுள்ளது. இதனால் நடுரோட்டில் அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த குலசேகரன்பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
இதை அறிந்த பொதுமக்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் நேற்று காலை சுமார் 11 மணியளவில் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உடன்குடி நகர பகுதியில் சாலைகளில் அலையும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஒரு தொழிலாளி மாடு முட்டியதில் பலியாகி விட்டார். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலைகளில் மாடுகள் நடமாட்டத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நடமாடும் மாடுகள் பிடிக்கப்பட்டு குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்படும். மாடு முட்டியதில் உயிரிழந்த பந்தல் தொழிலாளி குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு சாலையில் நடமாடும் மாடுகளை பிடித்து தொடர்ந்து கோசாலையில் ஒப்படைக்கப்படுவதுடன், மாடுகளின் உரிமையாளர்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகல் உறுதியளித்தனர். இதை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் முற்றகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.