வருகிற நாடாளுமன்ற தேர்தலில், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு


வருகிற நாடாளுமன்ற தேர்தலில், புதுச்சேரி உள்பட   40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்  முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு
x

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு

ஈரோடு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான ெவற்றிபெறும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் பால் விலை உயர்வு உள்பட பல்வேறு விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க.வை அசைக்க முடியாது

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ., சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்.என்.சிவராஜ் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி நடைபெறுகிறது. நாளை தேர்தல் நடைபெற்றாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தி.மு.க.வினர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். ஆனால் எந்தவித கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை. தாலிக்கு தங்கம் கொடுக்கவில்லை. பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கவில்லை. அ.தி.மு.க. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. ஆனால் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்டது. சட்டம், ஒழுங்கும் சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது. அ.தி.மு.க.வை யாரும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது.

மகத்தான வெற்றி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு படைக்கும் வகையில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். தற்போது மாணவ- மாணவிகளின் படிப்புக்கு கடன் தருவதில்லை. மடிக்கணினி கிடையாது. நோட்டுப்புத்தகம் வழங்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவோம் என தி.மு.க.வினர் கனவு காணுகிறார்கள் அது வீண் கனவு என்பதை அவர்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், கொமராபாளையம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.சரவணன், சிக்கரசம்பாளையம் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் ஆர்.தேவராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, சத்தி நகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் பிரபு மற்றும் நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story