ஒழலக்கோவில் கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு குத்தகை உரிமம் வழங்க வேண்டும்; மத்திய பிரதேசத்தில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு


ஒழலக்கோவில் கிராமத்தில் உள்ள  கல்குவாரிக்கு குத்தகை உரிமம் வழங்க வேண்டும்;  மத்திய பிரதேசத்தில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு
x

ஒழலக்கோவில் கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு குத்தகை உரிமம் வழங்க வேண்டும் என்று மத்திய பிரதேசத்தில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு

ஒழலக்கோவில் கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு குத்தகை உரிமம் வழங்க வேண்டும் என்று மத்திய பிரதேசத்தில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கல்குவாரி குத்தகை உரிமம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கோபி வட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு, ஜல்லி மற்றும் கல் உடைப்போர் கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

மத்திய பிரதேச மாநிலம் பசோதா மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 25 குடும்பத்தினர் கடந்த 1999-ம் ஆண்டு மீட்கப்பட்டோம். இதைத்தொடர்ந்து நாங்கள், ஈரோடு மாவட்டம் நம்பியூர் ராஜீவ் காந்தி நகரில் குடியமர்த்தப்பட்டோம். நாங்கள் தொழில் செய்து பிழைக்க ஒழலக்கோவில் கிராமத்தில் உள்ள கல்குவாரி 5 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது. குத்தகை காலம் முடிவுற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வேலையின்றி கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம். எங்களுக்கு மீண்டும் குத்தகை உரிமம் வழங்கி, நாங்கள் பிழைக்க வழிவகை செய்ய வேண்டும். வறுமையில் வாடும் எங்களது கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித்தர வேண்டும். இல்லையெனில், எங்களது ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட இடத்துக்கே எங்களை மீண்டும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அடிப்படை வசதி

நல்லாம்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் பேரூராட்சி செயல் அலுவலர் பொது சுகாதார பொருட்கள் வாங்குவதாக குறிப்பிட்டு பல போலி ரசீதுகள் மூலமாக பணம் கையாடல் செய்திருந்தார். இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றாததால், மக்களுக்கான குடிநீர், மின் விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை.

செயல் அலுவலரின் இத்தகைய போக்கினால் நாங்கள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் கையெழுத்து போடவில்லை என்றாலும் மன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி எங்களை அலட்சியப்படுத்தி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

163 மனுக்கள்

பொது நல ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில், ஆம்லெட் ஒன்று ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே விலை கட்டுப்பாட்டு சட்டப்படி அந்த ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார். ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா. சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பல் நோக்கு ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி முடிக்கும் நிலையில் உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு 'காமராஜ் சிறப்பு மருத்துவமனை' என பெயர் சூட்ட வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த பலர் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 163 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story