வருசநாடு கிராமத்தில்அரசு பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடை:வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
வருசநாடு கிராமத்தில் அரசு பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடமலைக்குண்டு அருகே வருசநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே காளியம்மன், விநாயகர் கோவில்கள் மற்றும் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வரும் மாணவிகள் டாஸ்மாக் கடை அருகே சுற்றித்திரியும் போதை ஆசாமிகளால் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மாற்றுப்பாதை வழியாக கோவில்களுக்கு செல்கின்றனர். டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் வாலிப்பாறை பிரதான சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால் டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பலமுறை பெண்கள் போராட்டம் நடத்தினர். கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருசநாடு கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறினர்.