தேனி மாவட்டத்தில்பிளஸ்-1 தேர்வில் 91.47 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வில் 91.47 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
91.47 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் 141 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 6,206 மாணவர்கள், 6,683 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் எழுதினர்.
அதில், 5,448 மாணவர்கள், 6,342 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 790 பேர் தேர்ச்சி பெற்றனர். அது 91.47 சதவீத தேர்ச்சி ஆகும். மாணவர்கள் 87.79 சதவீதமும், மாணவிகள் 94.90 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் 19-வது இடத்தை தேனி மாவட்டம் பிடித்தது.
1,099 பேர் தோல்வி
தேர்வு எழுதியவர்களில் 758 மாணவர்கள், 341 மாணவிகள் என மொத்தம் 1,099 பேர் தோல்வி அடைந்தனர். தமிழ் பாடத்தில் மட்டும் 320 பேர் தோல்வி அடைந்தனர். ஆங்கிலப் பாடத்தில் 363 பேர் தோல்வி அடைந்தனர். புள்ளியியல், பொது நர்சிங், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோல், 59 அரசு பள்ளிகளை சேர்ந்த 4,676 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில், 3,959 பேர் தேர்ச்சி பெற்றனர். அது 84.67 சதவீத தேர்ச்சி ஆகும்.
100 சதவீத தேர்ச்சி
இந்த பொதுத்தேர்வில் மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் உள்பட 31 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. மேலும் 19 அரசு பள்ளிகள் 80 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்றன.
மேலும், ஆண்கள் பள்ளியில் படித்து தேர்வு எழுதிய 1,040 மாணவர்களில் 832 பேர் தேர்ச்சி பெற்றனர். அது 80 சதவீதம் ஆகும். பெண்கள் பள்ளியில் படித்து தேர்வு எழுதிய 2,471 மாணவிகளில் 2,339 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அது 94.66 சதவீதம் ஆகும். இருபாலர் பள்ளியில் படித்து தேர்வு எழுதிய 9,378 மாணவ, மாணவிகளில் 8,619 பேர் தேர்ச்சி பெற்றனர். அது 91.91 சதவீதம் ஆகும்.