தேனி மாவட்டத்தில்விவசாய பணிகளுக்கு தேவையான உரம் இருப்பு:வேளாண்மை அதிகாரிகள் தகவல்
தேனி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரம் இருப்பு
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளின் முதல்போக நெல் சாகுபடிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதை எதிர்பார்த்து ஏற்கனவே விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி இருந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் தேனி மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் வேளாண்மை தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரம் விற்பனை நிறுவனங்களில் போதிய அளவில் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி யூரியா 1,698 டன், டி.ஏ.பி. 1,720 டன், பொட்டாஷ் 422 டன், காம்ப்ளக்ஸ் 5,417 டன், சூப்பர் பாஸ்பேட் 402 டன் என இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விலை விவரம்
இந்த உரங்களை தங்களின் தேவைகளுக்காக வாங்கச் செல்லும் விவசாயிகள் ஆதார் எண் மற்றும் அதற்குரிய தொகையை எடுத்துச் செல்ல வேண்டும். வாங்கும் உரத்துக்கு உரிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகள் ஆகியவை உரங்களின் இருப்பு மற்றும் அவற்றின் விலை விவரங்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி எழுதி வைக்க வேண்டும். விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்களின் உர உரிமம் ரத்து செய்யப்படும். அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.