தேனி மாவட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்: 2 போலீசார் பணி இடைநீக்கம்


தேனி மாவட்டத்தில்  குற்றச்சாட்டுகள் எழுந்ததால் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்:  2 போலீசார் பணி இடைநீக்கம்
x

குற்றச்சாட்டுகள் எழுந்ததால் 2 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தேனி

குற்றச்சாட்டுகள்

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜெயக்குமார். இவர் மதுபோதையில் பணிக்கு வந்ததாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு புகார்கள் வந்தன. மேலும் ராஜதானி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராமர்பாண்டியன், மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு துணை போவதாகவும் போலீஸ் சூப்பிரண்டுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த இரு குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஜெயக்குமார், ராமர்பாண்டியன் ஆகிய 2 பேரையும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம்

அதுபோல், போடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட போது கொலையாளிகள் ஒரு ஜீப்பில் தப்பிச் சென்றனர். இந்நிலையில் இந்த ஜீப்பில் தப்பிச் சென்ற நபர்களை பிடிப்பதில் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ரோந்து படை போலீஸ்காரராக பணியாற்றிய விக்ரம் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டியில் தனது கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சை கடத்திச் சென்ற வழக்கில் தேனி ஆயுதப்படை போலீஸ்காரர் கதிரேசன் கைது செய்யப்பட்டார். இதனால், அவரையும் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். 2 போலீசார் பணி இடைநீக்கம், 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் போன்ற அதிரடி நடவடிக்கைகள் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story