தேனியில், தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டஅரசு உதவிபெறும் பள்ளிக்கு 'சீல்' :அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தேனியில் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
பள்ளிக்குள் தாக்குதல்
தேனி சுப்பன்தெரு திட்டச்சாலையோரம் மகாராஜா தொடக்கப்பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும் பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியான அன்பழகன், கடந்த 11-ந்தேதி பள்ளிக்கு வந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சென்றாயப் பெருமாளை அவர் தாக்கிவிட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில், அன்பழகன் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட அன்பழகன் அல்லிநகரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார்.
'சீல்' வைப்பு
இந்த சம்பவம் குறித்து முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை கலெக்டருக்கு சமர்ப்பித்தார். அதன்பேரில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த பள்ளிக்கு 'சீல்' வைக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
இதற்காக மகாராஜா தொடக்கப்பள்ளிக்கு வருவாய்த்துறை, கல்வித்துறை அதிகாரிகள் நேற்று வந்தனர். பள்ளியில் போடப்பட்டு இருந்த பூட்டுகளை மாற்று சாவி மூலம் அவர்கள் திறந்தனர். பின்னர் பள்ளியில் இருந்த ஆவணங்கள், மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள், சத்துணவு வழங்குவதற்கான சமையல் பொருட்கள் ஆகியவை பள்ளியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டன. ஆவணங்கள் கல்வித்துறை அலுவலகத்துக்கும், புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் பங்களாமேட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து தாசில்தார் சரவணபாபு, முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலாவதி ஆகியோர் முன்னிலையில், அந்த பள்ளிக்கு பூட்டுப்போடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்போது, வட்டார கல்வி அலுவலர் ஹெலன் மெடில்டா, வருவாய் ஆய்வாளர் காதர், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
மாணவர்கள் பாதுகாப்பு
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. சுகாதாரம் இல்லை. சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்கள் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை ஆகியவற்றை தொடர்ந்து பள்ளிக்கு 'சீல்' வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சீல் வைக்கப்பட்டது. இங்கு படித்த மாணவ, மாணவிகள் பங்களாமேடு நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியை ஆகிய இருவரும் பணி நிரவல் அடிப்படையில் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள்" என்றார்.