திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 1,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 1,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு போன்றவைகளுக்கு காரணமாக உள்ளதாக மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே பி. சீனிவாசராவ் மணிமண்டபத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.

1,500 பேர் கைது

இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, உலகநாதன், தமிழ் மாநில விவசாய சங்க பொதுச் செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜவகர், நகர செயலாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 1,500 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுதலை செய்தனர்.

பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 3-வது நாளாக நேற்று மத்திய அரசை கண்டித்து மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் கும்மி அடித்தும், மத்திய அரசை கண்டித்து ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர்வலம்

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை. அருள்ராஜன், நகரச் செயலாளர் வி.எம்.கலியபெருமாள், மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் மாதர் சங்க பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.


Next Story