திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சந்திரசேகரர் தெப்பல்உற்சவத்திலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சந்திரசேகரர் தெப்பல்உற்சவத்திலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மகா தீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 27-ந் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. பரணி தீபம் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலையிலும், மகா தீபம் கோவிலில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் உச்சியில் ஏற்றப்பட்டது.
மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
நேற்று முன்தினம் மாலையில் மகாதீபம் நிகழ்ச்சி முடிந்த பிறகு கோவிலில் கொடியிறக்கம் நடைபெற்றது. இதையடுத்து இரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் மர மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்ரர் மர நந்தி வாகனத்திலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்த படி வீதிஉலா வந்தனர்.
தற்காலிக பஸ் நிலையங்கள்
தொடர்ந்து விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மகா தீபம், பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் திருவண்ணாமலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பஸ்கள் நிற்பதற்காக திருவண்ணாமலை நகரில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்பட்டு இருந்தன. இதனால் பக்தர்கள் பெரிய அளவிற்கு சிரமத்திற்கு உள்ளாகாமல் பஸ்களில் வந்து சென்றனர். மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் கிரிவலம் சென்று வந்த பக்தர்கள் ரெயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பவுர்ணமி கிரிவலம்
வழக்கமாக பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 8.35 மணியளவில் தொடங்கியது. இதனால் பவுர்ணமியையொட்டியும் நேற்று 2-ம் நாளாக ஆயிரகணக்கான பக்தர்கள் காலையில் இருந்தே தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் கோவிலை சுற்றியும், கிரிவலப்பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் ஏற்றப்படும். அதன்படி 2-ம் நாளான நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் மற்றும் கோவிலில் இருந்த பக்தர்கள் மகா தீபத்தை பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
தெப்பல் உற்சவம்
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருகில் அய்யங்குளத் தெருவில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடக்கிறது. முதல் நாள் விழாவான நேற்று சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சந்திரசேகரரை வைத்து 3 முறை வலம் வந்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். மகா தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி இரவு முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவல சென்ற வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பாடாத வகையில் கிரிவலப்பாதை உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டனர். இதனால் கிரிவலப்பாதை மிகவும் தூய்மையாக காணப்பட்டது. கிரிவலம் சென்ற பக்தர்கள் உடனுக்குடன் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை பாராட்டினர்.