தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில்பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கும் திட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கும் திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு மனுக்கள் எழுதி கொடுப்பதற்காக சிலர் கலெக்டர் அலுவலக சாலையோரத்தில் அமர்ந்து இருந்து மனு எழுதி கொடுத்தனர். இதற்காக ரூ.50 வரை கட்டணம் வசூலித்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி மனு கொடுக்க வந்த ஒரு வயதான தம்பதியர், மனு எழுதுவதற்கு பணம் கொடுத்ததால், தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை கலெக்டரிடம் கூறினர். இதனை தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் மனு எழுதும் இடத்துக்கு நேரடியாக சென்று விசாரித்தார். அப்போது, அவர்கள் தங்களின் வாழ்வாதாரம் என்று தெரிவித்தனர். இதனால் அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு மனுக்களை இலவசமாக எழுதி கொடுங்கள். உங்களுக்கான ஊதியத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் நானே ஏற்பாடு செய்கிறேன் என்று அவர்களிடம் கூறினார்.
ஆய்வு
அதன்படி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக மனு எழுதி கொடுக்கும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் மொத்தம் 6 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஒரு மேஜையில் 2 பேர் வீதம் 12 பேர் மனு எழுதி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்கள் அமர்ந்து மனுக்களை எழுதி கொடுக்க வசதியாக நாற்காலிகளும் போடப்பட்டு உள்ளன. மேலும், அந்த பகுதியில் இலவசமாக மனு எழுதி கொடுக்கப்படும். கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது என கலெக்டர் சார்பில் அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று 11 பேர் மனு எழுதி கொடுத்தனர்.
இந்த பகுதிக்கு நேற்று நேரில் வந்த கலெக்டர் செந்தில் ராஜ் பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்கள் எழுதி கொடுக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மனு எழுதி கொடுப்பவர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மனு எழுத வந்த பொதுமக்களிடமும் இந்த வசதி குறித்து விசாரித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.
தினக்கூலி
இது குறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறும் போது, பொதுமக்களின் வசதிக்காக இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 12 பேர் இந்த பகுதியில் மனு எழுதி கொடுத்து வந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இலவசமாக மனு எழுதி கொடுக்கிறார்களா?, கட்டணம் ஏதும் வசூலிக்கிறார்களா?, மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதை கண்காணிக்க 2 வருவாய் துறை அலுவலர்கள், 2 போலீஸ் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்ந்து இந்த பகுதியில் நடமாடி கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து ஊதியம் கொடுக்கப்படும். அரசு சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தினக்கூலி இவர்களுக்கு வழங்கப்படும். இவர்கள் மனு எழுதி கொடுக்கும் பணி செய்வதால் டேட்டா என்டரி ஆபரேட்டர் பணிக்கு வழங்கப்படும் தினக்கூலி இவர்களுக்கு அன்றைய தினமே வழங்கப்படும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்ந்து தாலுகா அலுவலகங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று கூறினார்.