தூத்துக்குடி மாநகராட்சியில்ரூ.10¼ கோடி உபரி வருவாய் பட்ஜெட் :மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்


தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.10¼ கோடி உபரி வருவாய் பட்ஜெட் டை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.10¼ கோடி உபரி வருவாய் பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சிறப்பு கூட்டமும் வெள்ளிக்கிழமை கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான உத்தேச பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்து பேசினார்.

உபரி பட்ஜெட்

அப்போது, தூத்துக்குடி மாநகராட்சியில் 2023- 2024-ம் நிதியாண்டில் வருவாய் நிதியில் சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ.31.64 கோடி, அரசு சுழல் நிதியாக ரூ.6.90 கோடி, அரசு மானியமாக ரூ.84 கோடி, ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.25.61 கோடி ஆக மொத்தம் ரூ.148.15 கோடி வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சாலை, கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு செலவினங்களுக்காக ரூ.8.16 கோடி, இயக்க செலவினங்களுக்காக ரூ.47.33 உள்பட பல்வேறு செலவினங்களுக்காக ரூ.147.02 கோடி செலவாகும் என்று உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.1.13 கோடி உபரி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.57.97 கோடி வருமானம் வரும் எனவும், ரூ.50.42 கோடி செலவாகலாம் எனவும், இதன் மூலம் ரூ.7.55 கோடி உபரி வருவாய் வரும் எனவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கல்வி நிதியில் ரூ.5.62 கோடி வருமானம் வரும் எனவும், ரூ.3.86 கோடி செலவாகும் எனவும், இதன் மூலம் ரூ.1.76 கோடி உபரி வருமானம் கிடைக்கும் எனவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இதனால் 2023- 2024-ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.211.74 கோடியாக இருக்கும் எனவும், மொத்த செலவினங்கள் ரூ.201.30 கோடியாக இருக்கும் எனவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.10.44 கோடி உபரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

போக்குவரத்து நெரிசல்

மேலும் அவர் கூறும் போது, முத்துநகர் கடற்கரை பூங்காவை மேலும் மெருகேற்றும் வகையில் பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையிலும், அனுமதிக்கப்படும் நேரமும் முறைப்படுத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 1180 சாலையோர வியாபாரிகள் அடையாளம் கண்டறியப்பட்டு ரூ.10 ஆயிரம் கடன் உதவித்தொகை பெற்று கொடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் நவீன சுகாதார வளாகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடலாம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கான சார்ஜர் யூனிட் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி கவுன்சிலர்கள் பரிந்துரையின் பேரில்தான் அனைத்து திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

தர்ணா

நேற்று கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பகக்கனி ஆகிய 3 பேரும் கறுப்பு உடை அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் 3 பேரும் திடீரென கூட்ட அரங்கின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், மேயர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்கள் இருக்கைகளுக்கு சென்றனர்.


Next Story