தூத்துக்குடி மாநகராட்சியில் 60வார்டுகளிலும் பூங்கா அமைக்கப்படும்: மேயர் ஜெகன்பெரியசாமி


தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் 60வார்டுகளிலும் பூங்கா அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளிலும் பூங்கா அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய உடன் அ.தி.மு.க. கொறடா மந்திரமூர்த்தி எழுந்து பேசத் தொடங்கினார். அவர் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அங்கு இருந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேரும் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி-மீளவிட்டான் இடையே நிகிலேசன் நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரெயில்வே துறையை கேட்டுக் கொள்வது, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்படும் அனுமதியற்ற கட்டுமானங்கள், அனுமதிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாக கட்டி வரும் கட்டிடங்கள் மீது உரிய அறிவிப்பு வழங்கி நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளவும் தற்காலிக பணியாளர்கள் நியமிப்பது என்பது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடிநீர்

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற கட்டிடங்களால் வருவாய் பாதிக்கப்படுகிறது. இதனால் அனுமதி பெறாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் 80 சதவீதம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. . கவுன்சிலர்கள் பிரச்சினைகளை உதவி ஆணையரிடம் தெரிவிக்கலாம். அப்போதும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் ஆணையாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்று இருந்து விடக்கூடாது. மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டையும் சீர்மிக வார்டாக மாற்ற அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும். அனைத்து வார்டுகளிலும் மின்விளக்குகள் அமைக்கப்படும். இதற்காக 2 ஆயிரத்து 500 விளக்குகள் வர உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் தலா ஒரு பூங்கா அமைக்கப்படும். இதுவரை சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன, என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர நல அலுவலர் அருண்குமார், உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story