தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 94.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 94.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வில் 94.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். 77 பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ்-1 தேர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும், செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களில் தங்கள் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். அதே போன்று ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களின் மதிப்பெண்கள் விவரம் ஒட்டப்பட்டு இருந்தன. இதனையும் மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 9 ஆயிரத்து 201 மாணவர்கள், 10 ஆயிரத்து 739 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 940 பேர் எழுதினர். இதில் 8 ஆயிரத்து 247 மாணவர்கள், 10 ஆயிரத்து 504 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 751 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.04 சதவீதம் ஆகும்.
கோவில்பட்டி
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 878 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 432 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 92.41 சதவீதம் தேர்ச்சி ஆகும். தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 80 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 8 ஆயிரத்து 590 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.60 சதவீதம் ஆகும். திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 982 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 729 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.92 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
இதே போன்று மாவட்டத்தில் 8 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட 77 பள்ளிக்கூடங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை எட்டி உள்ளனர்.