தூத்துக்குடியில்எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில்எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் சென்பகசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் துணை மேயருமான பி.சேவியர் வரவேற்று பேசினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி சலவைத் தொழிலார்கள் கடந்த 65 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சலவைக்கூடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மாநகராட்சி நிர்வாகம் வணிக வளாகம் மற்றும் சலவைக்கூடம் அமைத்துக் கொடுத்தது. அதன் அருகில் தற்போது சலவைத் தொழிலாளர்களின் பயன்பாட்டில் இருந்த இடத்தை சிறுவர் பூங்கா அமைத்து மாநகராட்சி நிறுவாகம் பறிக்க முயற்சிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
500 மீட்டர் இடைவெளியில் மாநகராட்சியின் மூன்று பிரமாண்ட பூங்காக்கள் இருக்க காலம் காலமாக சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தி வரும் அந்த இடத்தில் பூங்கா தேவைதானா?. அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை துணி உலர்த்த பயன்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் வசதி செய்து தர வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் காசிராஜன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர், முன்னாள் அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.