தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணாலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நகர்ப்புற நலவாழ்வு மையம்
தூத்துக்குடி மாநகராட்சியில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தலா 2 வீதம் 14 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஒரு பொது சுகாதார ஆய்வகம் ஆகியவை15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 72 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக பெரிய காட்டன் சாலை பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில், புல்தோட்டம் நுண் உர செயலாக்க மையம் அருகில், சங்குகுளி காலனி, மட்டக்கடை கோபால்சாமி தெரு, டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா பின்புறம், அலங்காரத்தட்டு, கே.டி.சி நகர் ஹவுசிங் போர்டு நீர்தேக்கத் தொட்டி அருகில், முத்தையாபுரம் நுண் உர செயலாக்க மையம் அருகில், சிவந்தாகுளம் புதுகிராமம் மெயின் ரோடு மற்றும் கதிர்வேல் நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
திறப்பு விழா
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா பின்புறம் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, தாசில்தார் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறும் போது, தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாடு முழுவதும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தொடங்கி வைத்து உள்ளார். 10 ஆயிரம் பேருக்கு ஒரு மையம் என்ற வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. நம் பகுதி மக்கள் இந்த மையங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்த மையத்தில் டாக்டர், நர்சு மற்றும் மருத்துவ உதவியாளர் உள்ளனர். இதனால் மக்கள் சிறிய உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை பெறலாம். காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும் என்று கூறினார்.