தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்பாதாள சாக்கடை திட்டம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்:மேயர் ஜெகன் பெரியசாமி


தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம் வருகிற ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று காலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் தி.சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 2 ஆயிரத்து 887 எல்.இ.டி தெருவிளக்குகள் ரூ.5 கோடியே 54 லட்சம் செலவில் அமைத்தல், 6 இடங்களில் ரூ.1 கோடியே 62 லட்சம் செலவில் அதிநவீன சமுதாய மற்றும் பொது கழிப்பிடங்கள் அமைத்தல், ரூ.14 கோடியே 34 லட்சம் செலவில் தார் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், மழைநீர் வடிகால் பணிகள், சிறுபாலம் அமைக்கும் பணிகள், குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், ரோச் பூங்காவில் உள்ள 5 தற்காலிக கடைகளை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்குவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாரபட்சம் இல்லை

பின்னர் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்கு பேசினர். இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அப்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் பணிகள் நல்ல முறையில் முழுமையாக நடைபெற கவுன்சிலர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். 20 அடி, 40 அடி சாலைகளில் முழுமையாக புதிய சாலைகள் அமைக்கப்படும். அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சமின்றி அகற்றப்படும். எதிர்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறுகின்றன. இதில் பாராபட்சம் ஏதும் கிடையாது.

பாதாள சாக்கடை

மாநகராட்சி பகுதியில் 151 பூங்காக்கள் இருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது 40 பூங்காக்கள் தான் செயல்பாட்டில் உள்ளன. எனவே, மக்கள் விரும்பும் இடங்களில் வசதிக்கு ஏற்ப பூங்கா வசதிகள் செய்து கொடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் முடிவடையும். பாதாள சாக்கடை திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.

கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story