தூத்துக்குடியில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர் அகற்றப்பட்டது
தூத்துக்குடியில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றினார்கள்.
4 வயது குழந்தை
தூத்துக்குடியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தை தனது கழுத்தில் கிடந்த சங்கிலியில் இருந்த உலோக டாலரை தவறுதலாக விழுங்கியது. இதனால் அந்த குழந்தை உணவு சாப்பிட முடியாமலும், மூச்சு விட முடியாமலும் சிரமப்பட்டது. இதையடுத்து உடனடியாக குழந்தை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து குழந்தைக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் வைர வடிவ உலோக டாலர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குழந்தைக்கு உணவு விழுங்குவதிலும், சுவாசிப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை
இதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி டீன் நேரு அறிவுறுத்தலின் பேரில், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிவசங்கரி, சந்தானகிருஷ்ணகுமார், ராபின் ரிச்சர்ட்ஸ் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் பலராமகிருஷ்ணன், சுகிர்தராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
உணவுக்குழாய் உள் நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண்டையில் இருந்த உலோக டாலரை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
மருத்துவ குழுவுக்கு பாராட்டு
தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சையானது முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது.
இதையடுத்து டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் குழுவினரை பாராட்டினர்.