திருச்செந்தூரில்கோவில் பணியாளர்கள் 'திடீர்' தர்ணா போராட்டம்


திருச்செந்தூரில்கோவில் பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் கோவில் பணியாளர்கள் நேற்று திடீரரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடா்பாக 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் கோவில் பணியாளர்கள் நேற்று திடீரரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடா்பாக 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்ணா போராட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பணியாளர்கள் மகாமுனி, சொர்ணம், ரவிக்குமார், வேல்முருகன், சண்முகம் மற்றும் சபாகரன் ஆகிய 6 பேரை பழனி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களுக்கு பணியிட மாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், பணியாளர்கள் திருக்கோவில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் அங்கம் வகிப்பதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையினை வசூலிக்க முடியாத நிலை உள்ளது எனவும், இதனால் கூட்டுறவு சங்க தேர்தல் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கூறி அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு் தலைவர் வீராங்கன் தலைமையில் கோவில் பணியாளர்கள் நேற்று கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் பாலமுருகன், பாலசுப்பிரமணியன் குருக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

41 பேர் கைது

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில் இணை ஆணையர் கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 41 பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் கூறுகையில், "கோவில் பணியாளர்கள் 6 பேரை பணியிட மாற்றம் செய்தது அரசின் வழக்கமான நடைமுறைதான். அறநிலையத்துறை ஆணையரின் இந்த உத்தரவுக்கு பணியாளர்கள் கீழ்படியாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை அரசிடம் முறைப்படி தெரிவிக்காமல் பணியை புறக்கணிப்பு செய்து பக்தர்களுக்கு இடையூறு செய்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'் என்றார்.


Next Story