திருவாரூரில், தபால் ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்
திருவாரூரில், தபால் ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்
அஞ்சல்துறையை தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி திருவாரூரில் தபால் ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது.
20 அம்ச கோரிக்கைகள்
அஞ்சல் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம அஞ்சல் ஊழியருக்கு இலாகா அந்தஸ்து மற்றும் சமூக பாதுகாப்பினை வழங்க வேண்டும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய தபால் ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த 1-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை கருப்பு அட்டை அணிந்தும் பணியாற்றுதல் மற்றும் 9-ந்தேதி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
வேலைநிறுத்தம்
அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்திந்திய தபால் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை விளக்கி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சலக எழுத்தர் சங்க திருவாரூர் கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சரஸ்வதி, தபால்காரர் சங்க தலைவர் சேகர், செயலாளர் எல்பன்ஸ், கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து பணிகளும் பாதிப்பு
இந்த போராட்டம் காரணமாக திருவாரூர் தலைமை தபால் நிலையம் உள்பட 25 துணை அஞ்சல் அலுவலகம், 71 கிளை அஞ்சல் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதில் 258 பேர் பணியாற்றி வரும் நிலையில் 236 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் அரசின் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. இதனால் அலுவலகம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன.
திருத்துறைப்பூண்டி
அஞ்சல் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தபால் ஊழியர் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு தபால் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர்கள் பாலகுமார், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை துணைச்செயலாளர் இளவரசன் தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க பொறுப்பாளர் ரேவதி நன்றி கூறினார்.