டி.என்.பாளையத்தில் சாலை வசதி கேட்டு மலைக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் நேற்று டி.என்.பாளையம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மலைக்கிராம மக்கள் கூறியதாவது:-
டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சியில் வினோபாநகர் வரை பஸ் போக்குவரத்து வசதியுள்ளது. வினோபா நகர் பகுதியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் மலைக்கிராம மக்களுக்கு தரமான சாலை வசதியோ, பஸ் போக்குவரத்தோ இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் விளாங்கோம்பை மலைகிராமத்தில் பள்ளிக்கூடம் செல்லும் வயதில் 30 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது, இவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டுமாயின் அடர்ந்த வனப்பகுதியில் 4 காட்டாறுகளை கடந்து வனச்சாலையில் 8 கிலோமீட்டர் பயணித்து வினோபா நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஒரு தொடக்கப் பள்ளியை அரசு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு விளாங்கோம்பை கிராமத்திலேயே நிரந்தரமாக ஒரு தொடக்கப் பள்ளியை தொடங்க வேண்டும் மற்றும் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு மலைக்கிராம மக்கள் கூறினார்கள்.
இதில் பாதிக்கப்பட்ட பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் டி.என்.பாளையம் வட்டார கல்வி அலுவலகத்திலும், டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகத்திலும் விளாங்கோம்பை கிராம மக்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.