தொட்டிபாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை


தொட்டிபாளையம் ஊராட்சியில்  கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை  விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2022 7:30 PM GMT (Updated: 23 Sep 2022 7:30 PM GMT)

கழிப்பறை

ஈரோடு

தொட்டிபாளையம் ஊராட்சியில் 2 ஆண்டுகளாகியும் கழிப்பறை கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. விரைவில் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறக்கப்படாத கழிப்பிடம்

பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது தொட்டிபாளையம் ஊராட்சி. இங்கு வசிக்கும் பழைய காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு கழிப்பிட வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று பவானி ஊராட்சி ஒன்றியம் மூலம் சுமார் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு கழிப்பறைகளுடன் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கு 4, பெண்களுக்கு 4 என மொத்தம் 8 கழிப்பறைகள் உள்ளன. ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை கழிப்பறை கட்டிடம் திறக்கப்படவில்லை.

கோரிக்கை

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, 'கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடம் 8 கழிப்பறைகளுடன் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. பூட்டப்பட்டே கிடக்கிறது.

கழிப்பறை இருந்தும் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் நிலவுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. 2 ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் பக்கவாட்டு பகுதி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கழிப்பறையில் தண்ணீர் வசதியும் இல்லை. எனவே தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி உடனே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.


Next Story