டிராக்டர், லாரிகளில்திறந்த நிலையில் எடுத்துச் செல்லப்படும் கட்டுமான பொருட்கள்
தேனி மாவட்டத்தில் டிராக்டர், லாரிகளில் திறந்த நிலையில் எடுத்து செல்லப்படும் கட்டுமான பொருட்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தேனி மாவட்டத்தில் பல இடங்களில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக மணல், எம்.சாண்ட், சிமெண்டு, ஜல்லிகற்கள், செங்கல் போன்றவை லாரி, டிராக்டர்களில் எடுத்து செல்லப்படுகிறது.
அவ்வாறு செல்லும் வாகனங்களில் கட்டுமான பொருட்கள் தார்ப்பாய் போட்டு மூடாமல் திறந்த நிலையில் நகர் பகுதி வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. மண், கிராவல் போன்ற கனிம வளங்களும், அதே போன்று திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் காற்றுக்கு மண்துகள்கள் பறந்து பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து பரிதவிக்க வைக்கிறது. விபத்துகள் ஏற்படவும் வழிவகை செய்கிறது.
விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்லும் இதுபோன்ற வாகனங்களின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் நலன் கருதியும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும் கனிம வளங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை லாரி மற்றும் டிராக்டர்களில் காற்றுக்கு பறக்காத வகையில் மூடிய நிலையில் எடுத்து செல்வதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.