தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
தமிழ்நாடு அரசு கூட்டுறவு த்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி சார்நிலை பணியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை மிகவும் கீழ்த்தரமாக பேசும் செங்கல்பட்டு வீட்டு வசதி துணைப்பதிவாளர் உமாதேவியை பணிநீக்கம் செய்ய வேண்டும், பால் கூட்டுறவு தணிக்கை மற்றும் வீட்டு வசதி துறையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணி புரியும் ஊழியர்களை உடனே தாய் துறைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐந்தாண்டுகள் கடந்தும் பால் கூட்டுறவு தணிக்கை துறை இயக்குனராக பணியாற்றி வரும், கூடுதல் பதிவாளரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும், மேலும் விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
போராட்டம்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் முதல் கூட்டுறவு சார் பதிவாளர்கள் வரை உள்ள பணியாளர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு அலுவலகங்களில் சுமார் 95 சதவீதம் பணியாளர்கள் வேலைக்கு வர வில்லை. இதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி சரக துணை பதிவாளர் அலுவலகங்கள் வழக்கமான செயல்பாடு இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.