தூத்துக்குடி மாவட்டத்தில் 66 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்டத்தில் 66 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தூத்துக்குடியிலுள்ள பள்ளி ஒன்றில் கனிமொழி எம்.பி. திட்டத்தை தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 66 பள்ளிக்கூடங்களில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை கனிமொழி எம்.பி. நேற்று காலையில் தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்

தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, உணவு வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். உணவு தயாரிக்கும் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கனிமொழி எம்.பி

விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டமானது மிக மிக முக்கியமான திட்டம். இது சிறுவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில்தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நமது முதல்-அமைச்சர் தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கி உள்ளார். இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய திட்டத்தை முதல்-அமைச்சர் தந்து இருக்கிறார்.

காலையில் சாப்பாடு கொடுக்கும்போது எல்லோரும் தயவு செய்து சாப்பிட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 66 பள்ளிக்கூடங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இன்னும் சில மாதங்களில் எல்லா பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் கீதாஜீவன்

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, காலை உணவு திட்டம், முதல்-அமைச்சரின் எண்ணத்தில் உருவான உன்னத திட்டம் ஆகும். கூலிவேலை, விவசாய தொழில் செய்பவர்கள் அதிகாலையிலேயே பணிக்கு செல்வதால், குழந்தைகளை சரிவர கவனிக்காமல் சென்று விடுகிறார்கள். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பள்ளிக்கு சென்று விடுகின்றனர். இந்த குழந்தைகளின் பசியை போக்கி, ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளை உருவாக்க இந்த திட்ட திட்டத்தை கொண்டு வந்து உள்ளார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 8 பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1,425 பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள், என்று கூறினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 66 பள்ளிக்கூடங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.


Next Story