தூத்துக்குடிமாவட்டத்திலுள்ளதாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது
தூத்துக்குடிமாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
ஜமாபந்தி
கிராம கணக்குகளை சரி பார்க்கும் வகையில் ஆண்டு தோறும் தாலுகா அலுவலகங்களில் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் முகாம் (ஜமாபந்தி) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. முதல் நாளான நேற்று கீழத்தட்டப்பாறை உள்வட்டத்துக்கு உட்பட்ட உமரிக்கோட்டை, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, அல்லிக்குளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்குசிலுக்கன்பட்டி ஆகிய 7 கிராமங்களுக்கான கிராம வருவாய் கணக்குகளை உதவி கலெக்டர் கவுரவ்குமார் தணிக்கை செய்தார்.
23-ந் தேதி வரை
இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 52 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3 பட்டா மாறுதல் மனுக்கள், 7 உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்கள், ஒரு முதியோர் உதவித்தொகை ஆகியவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணைகளை உதவி கலெக்டர் வழங்கினார். முகாமில் தாசில்தார் பிரபாகரன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இதில், மொத்தம் 82 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இதில், சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த நல்லசாமி மனைவி ராஜேஸ்வரி என்பவருக்கு இணையவழி பட்டா உத்தரவும், செங்கோட்டை கிராமத்தை சேர்ந்த மாரிச்சாமி மனைவி அழகம்மாள் என்பவருக்கு நத்தம் பட்டாவுக்கான உத்தரவும் வழங்கப்பட்டது.
எட்டயபுரம்
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு தனி துணை கலெக்டர் ஜெயா தலைமை வகித்து 36 மனுக்களை பெற்றார். இதில், 2 பட்டா மாறுதல் மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் மல்லிகா, தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து தாலுகா அலுவலகங்கள்
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி நடந்தது. அந்தந்த தாலுகா அலுவலகங்களில் உள்ள வருவாய் கிராமங்களை பொறுத்து வருகிற 26-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.