தூத்துக்குடி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதிக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அகமது இக்பால், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் பால் ராஜேந்திரன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தாஸ், தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சந்தனராஜ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் வேலன், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொறுப்பாளர் காதர் மைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழகத்தில் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் ஊர்வலம் நடக்க உள்ளது. தமிழகத்தில் தனது செல்வாக்கை காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த ஊர்வலத்தை நடத்துகிறது. இந்த ஊர்வலத்தை அனுமதிப்பது அமைதிக்கும், மக்கள் ஒற்றுமைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆகையால் மாவட்ட பாதுகாப்பு கருதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறி உள்ளனர்.