தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் மழைநீர் தேங்குவதை தடுக்க உப்பாற்று ஓடை தூர்வாரப்படுகிறது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் மழைநீர் தேங்குவதை தடுக்க உப்பாற்று ஓடை தூர்வாரப்படுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள முத்தம்மாள் காலனி பகுதியில் மழைநீர் தேங்காமல் கடலுக்கு செல்லும் வகையில் உப்பாற்று ஓடை தூர்வாரப்படுவதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ெதரிவித்தார்.
ஓடையில் தூர்வாரும் பணி
ஓட்டப்பிடாரம் தாலுகா புதூர்பாண்டியாபுரம் உப்பாற்று ஓடையில் தூர்வாரும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை தாங்கினார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
மழைநீர் தேங்குவதை தடுக்க...
கடந்த காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி கடுமையான மழையால் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக முத்தம்மாள் காலனியில் அதிகளவில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அந்த காலனியில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக, ஓசநூத்து, ஆரைக்குளம், புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்ற காற்றாற்று வெள்ளத்தை நேரடியாக கடலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழியில் உள்ள உப்பாற்று ஓடையில் மூச்செடிகள் சூழ்ந்து பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் கனமழைக்கு முன்பாக ஓடை தூர்வாரப்படுகிறது.
கடந்த ஆண்டு முத்தம்மாள் காலனி பாதிப்புக்கு உள்ளான இடங்களை ஆய்வு செய்து, மழைநீர் தேங்காத வகையில் ஓடை முறையாக தூர்வாரப்பட்டு நேரடியாக மழைநீர் கடலுக்கும் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தூர்வாரம்பணி அரசு மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு 3½ கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. தேவைப்பட்டால் தூர்வார் பணி தொடர்ந்து நடைபெறும்' என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், யூனியன் தலைவர் ரமேஷ், மீனவர் நல வாரிய தலைவர் கவுதம், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அமலா ஜெசி ஜாக்குலின், ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் உலகநாதன், தாசில்தார் நிசாந்தினி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் மஞ்சுளா, இளையராஜா, யூனியன் கவுன்சிலர் தெய்வராணி, கிராம நிர்வாக அலுவலர் வீரமாமுனிவர் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.