தூத்துக்குடி ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60 தக்காளி விற்பனை
தூத்துக்குடி ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60 தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன்கடைகளில்
தூத்துக்குடியில் தக்காளி உள்ளிட்ட காய்கனிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தக்காளி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று தூத்துக்குடியில் உள்ள முத்தம்மாள் காலனி, சுந்தரராமபுரம், டூவிபுரம், அண்ணாநகர், அன்னை இந்திராநகர் உள்ளிட்ட 15 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒருவருக்கு ஒருகிலோ
இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடியில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கடைக்கு தலா 20 கிலோ மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. எனவே ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் வெளிச் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரேஷன்கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.