தூத்துக்குடி ஸ்பிக் நகரில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி


தூத்துக்குடி ஸ்பிக் நகரில்  காற்று மாசுபாடு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:33+05:30)

தூத்துக்குடி ஸ்பிக் நகரில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடந்தது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தேசிய தூய காற்று செயல் திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்துறை, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப் படை இணைந்து நடத்திய காற்று மாசுபாடு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலிப் பேரணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மனித சங்கிலி பேரணி ஸ்பிக்நகர் பிரதான நுழைவு வாயிலில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 250 தேசிய பசுமை படை மாணவ, மாணவியர்கள் மற்றும் 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் காற்று மாசுபடுவதை தவிர்த்தல் குறித்ததான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி நின்றனர்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜோ, துணை மேயர் ஜெனிதா, உதவி ஆணையர்கள் சந்திரமோகன், தனசிங், ராமச்சந்திரன், உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், காந்திமதி, நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், ஸ்பிக் நிறுவன நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ், மக்கள் தொடர்பு அலுவலர் குணசேகரன், தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மனித சங்கிலி பேரணி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அருள் சகாயம் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story