தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்: 8 வாகனங்கள் மீட்பு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 8 வாகனங்கள் மீட்கப்பட்டது.
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடியில் சமீபகாலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதனை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தனிப்பிரிவு ஏட்டு சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மணிநகர் பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த செல்லத்துரை பாண்டியன் மகன் ராமர் (வயது 30), பசும்பொன்நகரை சேர்ந்த தளவாய் மகன் பரமசிவம் (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மத்தியபாகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 8 மோட்டார் சைக்கிள்களை இவர்கள் இருவரும் திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமர், பரமசிவம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 8 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.