தூத்துக்குடியில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கம் விரிவாக்கப்பணி:கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கம் விரிவாக்கப்பணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் செலவில் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கம் விரிவாக்கப் பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
கூட்ட அரங்கம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கு அமைந்து உள்ளது. இந்த கூட்ட அரங்கில் போதுமான இடவசதி இல்லாததால், அதனை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தை ரூ.75 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) தம்பிரான் தோழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாலைப்பணிகள் ஆய்வு
இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.12 கோடி செலவில் கோவங்காடு முதல் உப்பாத்து ஓடை வரை 2.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டு உள்ள தார்சாலை மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் பெட்டிப் பாலம், முக்காணி- கோவில்பட்டி சாலையில் ரூ.3.20 கோடி செலவில் கீழத்தட்டப்பாறை முதல் தெற்கு சிலுக்கன்பட்டி வரை 2.20 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, தூத்துக்குடி- ஸ்ரீவைகுண்டம் சாலையில் பேட்மாநகரம் முதல் வாகைகுளம் வரை 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.3.85 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலை ஆகிய சாலை பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, சாலைகளின் அகலம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார்.
மேலும், தூத்துக்குடி- பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அருகே ரூ.95 லட்சம் செலவில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார். அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆறுமுகநயினார், உதவி கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் ஜெயஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.
முகாம் ஆய்வு
புதுக்கோட்டை ஆர்.சி. மகாலில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாமையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி தாசில்தார் பிரபகாரன் உடன் இருந்தார்.