தூத்துக்குடியில்வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்
தூத்துக்குடியில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடியில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) வே.சாந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடன் வழங்கும் முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்துக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. இந்த முகாமில் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்களான வினியோக தொடர் சேவைகள், கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், ஆய்வுக்கூடங்கள், குளிர்பதன தொடர் சேவைகள், தளவாட வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், சுத்தம் செய்தல், உலர்த்துதல், வகைப்படுத்துதல், தரம்பிரித்தல், மின்னணு சந்தையுடன் கூடிய வினியோக தொடர், சூரிய மின்சக்தியுடன் கூடிய உட்கட்டமைப்பு, பழுக்க வைக்கும் அறைகள் ஆகிய வேளாண் உட்கட்டமைப்பை ஏற்படுத்த இந்த திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெறலாம். இந்த திட்டத்தில் 3 சதவீதம் வட்டி சலுகை, அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான திட்ட முதலீட்டுக்கு 7 ஆண்டுகள் வரை வழங்கப்படும். 8.7.2020-க்கு பின்னர் பெறப்பட்ட அனைத்து வேளாண் உட்கட்டமைப்பு வங்கி கடன்களை இந்த திட்டத்தில் இணைத்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு...
இந்த திட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுபொறுப்பு குழுக்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், மத்திய, மாநில அரசு உதவி பெறும் பொது, தனியார் கூட்டு திட்டங்கள், தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் சேமிப்பு கழகங்கள் பயனடையலாம்.
எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் 93613 04598, தூத்துக்குடி கோட்டம் 97882 87514, கோவில்பட்டி கோட்டம் 96557 76828, திருச்செந்தூர் கோட்டம் 94881 02018 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.