தூத்துக்குடியில்விசைப்படகு தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்


தூத்துக்குடியில்விசைப்படகு தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 245 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பருவநிலை காரணமாக கடந்த வாரத்தில் கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள், கடந்த 4-ந் தேதி மீண்டும் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் விசைப்படகு தொழிலாளர்கள் வாரம் தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய பங்கு தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. அதனை மீண்டும் வழங்க வேண்டும், வாரத்தில் 6 நாட்களும் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், ஒரு படகில் இருந்து தொழிலாளர் விலகினால், உரிமையாளரிடம் இருந்து பெற்ற முன்பணத்தில் வழக்கம் போல் பாதியை திருப்பி செலுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 245 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இடையே அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று மீனவர்கள் புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு சென்றதால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. நாளை (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story