தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு பா.ஜனதாவினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு
தூத்துக்குடியில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜனதாவினருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மேலும் போட்டி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜனதாவினருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மேலும் போட்டி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நினைவு தினம்
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை, தென்பாகம் போலீஸ் நிலையம் முன்புள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காலை 11 மணி அளவில் பா.ஜனதா கட்சியினர், இந்து மக்கள் கட்சியினர் மாலை அணிவிப்பதற்காக சிலை வளாகத்துக்கு வந்து தயாராக நின்றனர்.
வாக்குவாதம்
அப்போது அங்கு நின்ற மாவட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த அகமது இக்பால், சுஜித் உள்ளிட்டவர்கள் பா.ஜனதா கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்தனர். இருதரப்பினரும் ஒருவரையொருவர் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கெங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் சிலை அருகில் இருந்து நகர்ந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
அதன்பேரில் பா.ஜனதா கட்சியினர் சிலை வளாகத்தில் இருந்து வெளியில் வந்தனர். அப்போது, பா.ஜனதா கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் சிலை வளாகத்தில் ஓரமாக நின்றனர். அதன்பிறகு ஒவ்வொரு தரப்பினராக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
பதற்றம்
இதைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மாலை அணிவித்தனர். அப்போதும், இருதரப்பினரும் ஒருவரையொருவர் கண்டித்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
இதனால் பதற்றமான சூழல் காணப்பட்டது. அதன்பிறகு போலீசார் இருதரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதன்பேரில் இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.