தூத்துக்குடியில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு


தூத்துக்குடியில்  குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு சனிக்கிழமை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வரவேற்பு குழு கவுரவ தலைவரும், நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி முதல்வருமான ரா.சாந்தகுமாரி மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:-

அறிவியல் மாநாடு

மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்றக் குழுவுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு 'ஆரோக்கியம் மற்றும் நலவாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்துகொள்வது' என்ற தலைப்பில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி அருகே வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வைத்து நடக்கிறது.

இந்த மாநாட்டில் 10 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் இருந்து மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 550 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். சுமார் 1000 குழந்தை விஞ்ஞானிகள், 500 வழிகாட்டி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என 1500 பேர் கலந்து கொள்கின்றனர்.

கலந்துரையாடல்

மாநில மாநாட்டுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்குகிறார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநர் சுதன் ஆன்லைன் மூலம் பங்கேற்று பேசுகிறார். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகின்றனர்.

இந்த மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், விஞ்ஞானிகளுடன் குழந்தைகள் கலந்துரையாடல், ஆசிரியர்களுக்கு சிறப்பு அமர்வு, எளிய அறிவியல் பரிசோதனை, கணக்குப் இனிக்கும், எழுத்தாளர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில் சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் 26 முதல் 30 வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாநாட்டில் சமர்பிக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர்கள் எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், எம்.தியாகராஜன், மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story