தூத்துக்குடியில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்பு


தூத்துக்குடியில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

வீடுகட்டும் பிரச்சினை

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது35). தச்சுவேலை செய்துவரும் இவர் தூத்துக்குடி ராஜகோபால்நகர் 1-வது தெரு பகுதியில் இடம் வாங்கி அதில் ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டியுள்ளார்.

இந்த நிலையில் அந்த நிலத்தின் உரிமையாளருக்கும், சுந்தருக்கும் இடம் வாங்கியதில் பணம் கொடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் இடத்தின் உரிமையாளர் வீட்டுக்கு இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை மிரட்டல்

இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்து உள்ளார். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர் நேற்று தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் ஆசிரியர் காலனி சந்திப்பு பகுதியிலுள்ள ஒரு வணிக வளாக மாடியில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இதனை தொடர்ந்து சுந்தர் டவரில் இருந்து கீழே இறங்கி வர சம்மதித்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் சுந்தரிடம் விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுந்தர் ஏற்கனவே மற்றொரு பிரச்சனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக பகுதியிலுள்ள மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story