தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை


தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் ஆத்திமுத்து. இவருடைய மகன் கார்த்தி (வயது 27). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 22-ந் தேதி சின்னகண்ணுபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

அந்த கடையின் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் 2 பேர் மது குடித்துக் கொண்டு இருந்தனர். இதனை பார்த்த கார்த்தி, அவர்களிடம் சென்று மது கேட்டு உள்ளார். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து மது குடித்தனர்.

அடித்துக் கொலை

அப்போது, கார்த்தி குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசினாா். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து கார்த்தியை அடித்தும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து, தான் தனது நண்பருடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்து விட்டதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் இடம் குறித்தும் தெரிவித்தார்.

போலீசார் விரைந்தனர்

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 17 வயது சிறுவன் நின்று கொண்டு இருந்தாா். அவர், பாழடைந்த கட்டிடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த கார்த்தியின் உடலை காண்பித்து உள்ளார்.

பின்னர் போலீசார், கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

தொடர்ந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த கந்தையா மகன் ராம்தேவ் (21) மற்றும் மேற்குறிப்பிட்ட 17 வயது சிறுவனும் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ராம்தேவ் உள்பட 2 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story