தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பு அறையில் ஏற்கனவே தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சீட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபார்க்கும் எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்களை முதற்கட்ட சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டன.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பதற்காக பெல் நிறுவன என்ஜினீயர்கள் தூத்துக்குடிக்கு வந்து உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு எந்திரத்தையும் பரிசோதித்தனர். எந்திரங்களில் பேட்டரிகள் நல்ல நிலையில் உள்ளதா?, பழுது இல்லாமல் இயங்குகிறதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10-ந் தேதி வரை நடக்கிறது.
சரிபார்ப்பு பணி
இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் 10.8.2023 வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த பணிகளுக்கு கண்காணிப்பாளராக தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் (நிலம்.எடுப்பு) ஆ.ம.காமாட்சிகணேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த வாரம் நானும், தனி மாவட்ட வருவாய் அலுவலரும் சென்னையில் தேர்தல் ஆணையம் மூலம் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டோம்.
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து உள்ளோம். அவர்களது முன்னிலையில் மின்னனு எந்திர வைப்பறை திறக்கப்பட்டு பெல் நிறுவன பொறியாளர்கள் 4 பேர் மூலம் அனைத்து எந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு
நமது மாவட்டத்தில் 4 ஆயிரத்து 671 வாக்குச்சீட்டு எந்திரங்கள், 2 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2 ஆயிரத்து 868 வாக்குப்பதிவு சீட்டை காண்பிக்கும் எந்திரங்கள் உள்ளன. அனைத்து எந்திரங்களிலும் ஏற்கனவே பதிவாகியிருந்த வாக்குப்பதிவு விவரங்கள் அழிக்கப்பட்டு, புதிதாக மாதிரி சின்னங்கள் பொருத்தப்பட்டு பெல் என்ஜினீயர்கள் மூலம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரியாக செயல்படுகிறதா? என்று பரிசோதனை செய்யப்படும். சரியாக செயல்படும் எந்திரங்களை தனியாக பிரித்து வைக்கப்படும். சரியாக செயல்படாத எந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்கப்படும். இந்த பணியில் மாவட்டம் முழுவதும் இருந்து 57 அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
அனைத்து பணிகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான சரிபார்ப்பு பணிகள் சரியாக மற்றும் பாதுகாப்பான முறையில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு நமது மாவட்டத்துக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பில் உள்ளன. கூடுதலாக தேவைப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து பெறப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் (நிலம் எடுப்பு) ஆ.ம.காமாட்சி கணேசன், மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் தில்லைபாண்டியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆனந்தசேகரன் (தி.மு.க.), சந்தனம் (அ.தி.மு.க.), சிவா (பகுஜன் சமாஜ்), சிவராமன் (பா.ஜனதா), முத்துமணி (இந்திய தேசிய காங்கிரஸ்), நாராயணமூர்த்தி (தே.மு.தி.க), கரும்பன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.